ஆசை ஆபத்து! சிறுகதை.
ஒரு காட்டில் ஒரு சிறிய செடி ஒன்று இருந்தது. அந்தச் செடிக்கு இலைகளே இல்லை, வெறும் முட்கள் தான் இருந்தன. அதற்காக அந்தச் செடி அடைந்த வருத்தம் கொஞ்சநஞ்சமல்ல. தனக்கு இலைகள் இல்லாதது ஒரு பெருங்குறையாகவே அதற்குத் தோன்றியது. அதனால் அது எப்பொழுதும் வாட்டத்துடன் இருக்கும்.
ஒருகால், “நமக்கு பளபளப்பான தங்க இலைகள் இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்!” என்று அந்த முட்செடி நினைத்தது. என்ன ஆச்சரியம்! உடனே அந்தக் காட்டிலிருந்த ஒரு வனதேவதை அதற்கு முன்னால் தோன்றி, “உன்னுடைய முட்களெல்லாம் மறைந்து அதற்குப் பதிலாகப் பளபளப்பான தங்க இலைகள் உண்டாகட்டும்” என்று வரம் கொடுத்தது. அவ்வளவுதான்; முட்செடி தங்கச் செடியாக மாறிவிட்டது.
ஆக! என்ன ஒரு வனப்பு! வெயில் வேளையில் அந்தச் செடியிலிருந்து உண்டாகும் பிரகாசம் கண்ணைப் பறித்தது. முட்செடிக்குச் சந்தோஷம் தாங்கவில்லை. மற்ற செடிகளுக்கெல்லாம் இல்லாமல் தனக்கு மாத்திரம் தங்க இலைகள் இருந்தால் அதற்குச் சந்தோஷமாக இருக்காதா, என்ன?
ஆனால் மறுநாளே அதற்கு வந்தது ஆபத்து! காட்டு வழியே வந்த ஒரு திருடன் அந்தச் செடியையும் அதன்பால் பரவிய தங்க இலைகளையும் பார்த்து ஆச்சரியத் தில் அப்படியே நின்றுவிடவில்லை; அந்தச் செடியிலிருந்த தங்க இலைகளையெல்லாம் ஒன்றுவிடாமல் பறித்துக்கொண்டு போய்விட்டான்! முட்செடி பழையபடி மொட்டையாகி விட்டது. அதற்கு வருத்தம் தாங்கவில்லை.
“தங்க இலைகளாயிருந்ததினால் தானே நமக்கு இந்த ஆபத்து வந்தது! கண்ணாடி இலைகளாயிருந்தால் இந்த ஆபத்து வந்திருக்காதல்லவா?” என்று அந்த முட்செடி நினைத்தது. உடனே வனதேவதை தோன்றி அது நினைத்தபடி அதற்குச் கண்ணாடி இலைகளைக் கொடுத்து விட்டுச் சென்றது.
என்ன துரதிர்ஷ்டம்! அதற்கு அடுத்த நாள் காற்று சற்றுப் பலமாக அடித்தது. அந்த இலைகளெல்லாம் கீழே விழுந்து நொறுங்கிவிட்டன. மறுபடியும் முட்செடி இலைகளில்லாமல் தவித்தது.
“திருடனோ நம்முடைய தங்க இலைகளைப் பறித்துக் கொண்டு சென்றுவிட்டான். காற்றோடு கண்ணாடி இலைகளெல்லாம் நொறுங்கிவிட்டன. இதெல்லாம் நமக்கு வேண்டவே வேண்டாம். மற்ற மரங்கள் மாதிரி நமக்கும் பசுமையான இலைகள் இருந்தால் அதுவே போதும்!” என்று அது எண்ணிற்று. தேவதையின் அருளினால் அந்தச் செடியில் உடனே இலைகள் தோன்றின. முட்செடி தழைத்து நின்றது.
அப்போது அந்த வழியாக வந்த ஆட்டுக்குட்டி ஒன்றிற்குப் பசுமையான இலைகளைக் கண்டதும் வாயில் ஜலம் ஊறிற்று. ஆகவே, அது அந்தச் செடியிலிருந்த இலைகளையெல்லாம் ஒன்று விடாமல் தின்று விட்டுப் போய்விட்டது!
பாவம், முட்செடி என்ன செய்யும்? அதற்கு அழுகையும் ஆத்திரமும் பொங்கிக் கொண்டு வந்தது. “மற்ற மரங்களைப் போல் நமக்கும் இலைகளில்லையே என்று நினைத்து வருந்தியதற்குத் தங்க இலைகள் கிடைத்தன. அவை திருட்டுப் போகவே கண்ணாடி இலைகள் கிடைத்தன. கண்ணாடி இலைகளும் காற்று அடித்து நொறுங்கிவிட்டன. பிறகு பசுமையான இலைகள் உண்டாயின. அந்த இலைகளாவது நிலைத்து நிற்கும் என்று பார்த்தால் அவற்றையும் அந்தப் பாழும் ஆடு வந்து தின்றுவிட்டது. நமக்கு எந்த இலைகள் இருந்தாலும் இப்படி ஆபத்தாகத்தான் வந்து முடியுமோ? சரி சரி, நாம் பழையபடி முட்செடியாக இருந்தாலே போதும்!” என்று நினைத்து அது கண்ணீர் விட்டது.
அடுத்த நிமிடம் அதற்கு முன்னால் தோன்றிய வனதேவதை, பழையபடி அதை முட்செடியாக மாற்றிவிட்டு மறைந்தது.
“இந்த முட்கள் தான் நம் உயிரை இத்தனை காலம் காப்பாற்றி வந்தன. இது தெரியாமல் நாம் என்னவெல்லாமோ எண்ணி வீணாக வருந்தினோமே!” என்று நினைத்து முட்செடி தனக்குள் சிரித்துக் கொண்டது. அதற்கு இப்போது எவ்வித ஆசையும் இல்லை; ஆபத்தும் இல்லை!
என்ன நண்பர்களே ஆசையே அழிவுக்கு வழி ஆகவே நம்மிடம் உள்ளதை கொண்டு நல்லது செய்வோம் நாளும் நாமும் நம்மைச் சார்ந்தவர்களும் நிறைவுற்றிருக்கும் குறை ஒன்றும் இல்லை குரு வாழ்க குருவே துணை

P.S.RAJ , B. LIT, MA – ASTRO
7558156423
9092687492
