ஒரு குரு உட்கார்ந்திருந்தார். அவருக்கு முன்னால் ஒரு சீடன் வந்து நின்றான்.

சுவாமி எனக்கு ஒரு பிரச்சனை என்றான்.

உனக்கு என்ன சிக்கல் விவரமாகச் சொல்லு என்றார் குரு.

சுவாமி இந்த ஊரிலே ஒரு பெரிய செல்வந்தர் இருக்கிறார் . அவர் வெளிநாடுகளுக்கு யாத்திரை போகப் போகிறார். அவர் போய்விட்டுத் திரும்பி வர பத்து மாதம் ஆகும் என்றான்.

அவர் வெளிநாடு போவதால் உனக்கு என்ன சிக்கல் என்று கேட்டார் குரு.

அந்த செல்வந்தருக்கு ஒரே பெண். அந்தப் பெண்ணை என்னுடைய பாதுகாப்பில் விட்டு விட்டு போக வேண்டும் என்று பிரிய படுகிறார் என்றான்.

போகட்டுமே அதனால் என்ன என்றார் குரு.

இப்போது சீடன் சொன்னான் சுவாமி என்னை இந்த ஊரில் எல்லோரும் நேர்மையானவன் என்று சொல்கிறார்கள். அதுக்கு தகுந்த மாதிரி தான் என் மனதையும் பழக்கப்படுத்தி வைத்திருக்கிறேன். இருந்தாலும் என் மேலேயே எனக்கு முழு நம்பிக்கை இன்னும் வரவில்லை. பத்து மாதகாலம் அந்தப் பெண்ணை நான் பாதுகாப்பாக என் வீட்டில் வைத்திருக்க வேண்டுமென்றால் எனக்கு பயமாக இருக்கிறது. அதனால் என்னுடைய இந்தப் பிரச்சினை தீர நீங்கள் தான் வழி சொல்ல வேண்டும் என்றான்.

குரு சொன்னார் இதோ பார் இது மாதிரியான சிக்கல்களில் இருந்து தப்பிக்கும் ரகசியம் தெரிந்த ஒருவன் இருக்கிறான். அவனை எனக்கு தெரியும் நீ நேராக அவனைப் போய் பார் என்றார். அவனைப் பற்றி எல்லா விவரமும் இருக்கிற இடத்தையும் சொன்னார் குரு. அடையாளம் சொன்ன அந்த ஆள் ஒரு பைத்தியக்காரன். பக்கத்து கிராமத்தில் தான் அவன் இருந்தான்.

சுவாமி நீங்க சொல்ற அந்த ஆசாமியை பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அவன் ஒரு பைத்தியக்காரன் அவன் எப்படி எனக்கு இந்த பிரச்சனையில் உதவ முடியும் என்றான் சீடன்.

அதைப் பற்றி நீ ஒன்றும் கவலைப்படாதே நீ நேராக அவனிடம் போ. ஆனால் மிகவும் கவனமாக அவனை கவனி.

குருவே சொன்ன பிறகு எப்படி சும்மாயிருக்க முடியும். நேராக அடுத்த ஊருக்குப் போனான்.அந்த பைத்தியக்காரனை பார்த்தான். இவன் போய் சேர்ந்த சமயத்தில் அந்த பைத்தியக்காரனுக்கு ஒரு சிறுவன் மதுவை ஊற்றிக் கொடுத்து கொண்டிருந்தான். அவன் அதை வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தான். இதைப் பார்த்ததும் இந்த சீடனுக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. இருந்தாலும் குரு சொல்லி அனுப்பியிருக்கிறார் என்பதனால் அவனிடம் நெருங்கினான்.

ஐயா தயவு பண்ணிச் சொல்லுங்க இப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்றான்.

அந்த ஆள் சொன்னான் இந்தச் சிறுவன் எனது மகன் இன்னும் கிட்டே வந்து பாருங்க அவன் ஊற்றிக் கொடுப்பது மதுவல்ல வெறும் தண்ணீர்தான். நான் வாங்கி குடித்துக் கொண்டிருக்கிறேன்.

எதற்காக நீங்கள் மது அருந்துவது போல் பாசாங்கு செய்கிறீர்கள்? நீங்கள் கையில் வைத்திருக்கிற கோப்பை மது அருந்துவதற்கு உள்ள கோப்பை தானே அதில் ஏன் தண்ணீரை ஊற்றிக் குடித்துக் கொண்டு இருக்கிறீர்கள்? எனக்கு ஒன்றும் புரியவில்லை. எதற்காக இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டான் சீடன்.

நான் இப்படி இருப்பதனால் ஒருவர் வெளிநாட்டு யாத்திரை போகும் போது அவருடைய மகளை என் பொறுப்பில் விட்டு போக வேண்டும் என்று பிரிய படுவதில்லை. அதற்கு இது ஒரு உபாயம் அப்படி என்றான் அந்த ஆள். சீடனுக்கு தூக்கிவாரிப்போட்டது.

இந்த கதை வேடிக்கையாக தெரிந்தாலும் இது மாதிரி பல சந்தர்ப்பங்களில் பல சிக்கல்களில் இருந்து தப்பிப்பதற்காக இவ்வாறு நாமும் நடந்து கொள்ள வேண்டி தான் இருக்கிறது.

y

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *