உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழகூடாது

பணக்காரர் ஒருவர் சூழ்நிலை காரணமாக தன் காரைத் தவிர்த்து ஆட்டோ ஒன்றில் வேகமாக ஏறினார்.

அவர் கையில் நான்கைந்து பைகளை வைத்திருந்தார். அவை அனைத்துமே பெரிதாக இருந்தன. 15 நிமிட பயண தூரத்தில் அவர் இறங்க வேண்டிய இடம் வந்ததும், அவர் இறங்கிக்கொண்டு ஆட்டோவை அனுப்பி விட்டார்.

அந்த ஆட்டோ டிரைவர் திரும்பி தன் வீட்டுக்கு வரும்போது பக்கத்து வீட்டு பையன் கையில் அடிபட்டு விடவே, அவன் குடும்பத்தை அழைத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்குச் சென்றார்.

அப்போதுதான் அந்த பையனின் அம்மா கேட்டார். ‘‘அண்ணா, இது என்னன்னா ஒரு பை பெரிசா கீழே வைச்சிருக்கு?’’

ஆட்டோ டிரைவர் எட்டிப் பார்த்தார். அது ஒரு பெரிய துணிப்பை. ஜிப் போட்டிருந்தது. அவர்களை மருத்துவமனையில் இறக்கி விட்டுவிட்டு பையைத் திறந்து பார்த்தார். அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. பார்த்து மலைத்து விட்டார். பக்கவாட்டில் ஒரு விசிட்டிங் கார்டு இருந்தது. அதில் போன் நம்பர் இருக்க, அதற்கு போன் செய்தார்.

போனை ஆட்டோவில் ஏறிய பணக்காரரே எடுத்தார். அவர் குரலில் பதற்றம் இருந்தது. ‘‘தம்பி, அது என் பணம்தாம்பா. நான் எப்படி உன்னைக் கண்டுபிடிக்கிறதுன்னு குழப்பத்தில இருந்தேன் நல்லவேளை, நீயே போன் பண்ணிட்டே’’ என்றார்.

பணக்காரர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு ஆட்டோ டிரைவர் சென்று, பணத்தை அவரிடம் கொடுத்தார். ஆட்டோ டிரைவரை அவர் அணைத்துக் கொண்டார். அவருக்கு விலையுயர்ந்த குளிர்பானமும் சிற்றுண்டியும் கொண்டு வரச் சொல்லி, வற்புறுத்தி சாப்பிடச் சொன்னார்.

பையில் இருந்த பணம் சுமார் ஒன்றரை கோடி என்றும்,

அதை தான் வாடகைக்கு விடுவதற்காகக் கட்டிக் கொண்டிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டிட வேலைக்காக எடுத்துச் செல்வதாகவும் சொன்னார். ‘‘பணத்தை தவற விட்டிருந்தால் மிகுந்த பண நெருக்கடிக்கு ஆளாகி இருப்பேன். நல்லவேளை, நீ காப்பாற்றினாய் தம்பி’’ என்று நன்றி சொன்னார்.

ஆட்டோ டிரைவர் கிளம்பும்போது, அவர் கையில் பணத்தைத் திணித்தார்.

‘‘தம்பி, இதுல ஐம்பதாயிரம் ரூபாய் இருக்கு. நீ வச்சிக்க. நீ எனக்கு செய்த நன்மை அப்படி!’’

‘‘இல்ல சார், எனக்கு அறுபதாயிரம் ரூபாய் வேணும்!’’

பணக்காரர் கூடுதலாக 10 ஆயிரம் ரூபாய் எடுத்துக் கொடுத்தார்.

‘‘எனக்கு பணமா வேண்டாம் சார்!’’

‘‘அப்படின்னா?’’

‘‘நீங்க அடுக்குமாடி கட்டி வாடகைக்கு விடும்போது, பொருளாதாரத்துல கொஞ்சம் கஷ்டப்படுற ஐந்து பேருக்கு நீங்க வாங்குறதா நினைக்கிற வாடகையில ஆயிரம் ரூபாய் குறைவா வாங்குங்க சார்.

ஒருத்தருக்கு வருஷத்துக்கு 12 ஆயிரம் குறைவா வாங்கினா, ஐந்து பேருக்கு அறுபதாயிரம் ரூபாய் சார். எனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை அப்படி யாருக்காவது கொடுங்க சார்!’’

‘‘ஏன் தம்பி இந்த முடிவு?’’

‘‘ஆமா சார், ஆட்டோவுக்கு மீட்டர் போட்டு ஓட்டச் சொல்ற சமூகம் ஏன் வீட்டு வாடகைக்கு, உணவுப் பொருள் விலை ஏற்றத்துக்கு, ஸ்கூல் பீஸுக்கெல்லாம் மீட்டர் போடச் சொல்றதில்லை சார்.

எல்லாருக்கும் மீட்டர் போட்டு ஓட்டுற எண்ணம் வந்தாதானே சமூகம் உருப்படும். சமூகத்தைப் பத்தி கவலைப்படாம, அவங்க அவங்க சுயநலத்துக்காக வீட்டு வாடகைகையை ஏத்திட்டா என்னை மாதிரி ஏழைக்கு வாழுற நம்பிக்கை எப்படி சார் வரும்?’’ என்றார்.

ஆட்டோ டிரைவர் சொன்னதன் நியாயம் பணக்காரருக்குப் புரிந்தது. அவருடைய அடுக்குமாடி குடியிருப்பைக் கட்டி முடித்ததும், நியாயமான வாடகைக்கே கொடுத்தார்.

தனி மனிதனாக பொருள் சேர்ப்பது மட்டும் முக்கியமல்ல. பிறரை நோகடிக்காமல் அறத்துடன் பொருள் சேர்ப்பதுதான் முக்கியம்.

இந்த இரண்டையும் உணர்த்திய ஆட்டோ டிரைவரை தன் ஒவ்வொரு வியாபார ஒப்பந்தத்தின்போதும் அந்த பணக்காரர் நினைத்துக் கொள்கிறார் என்பது அந்த ஆட்டோ டிரைவருக்கே தெரியாது.

அவர் எப்போதும் போல சமூகத்தையும் கணக்கிலெடுத்தே ஆட்டோ ஓட்டி சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்.

உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழகூடாது   என்ற வரிகளை மனதின் எண்ணம் இருந்ததால் அந்த பணக்காரர் தனது ஒவ்வொரு ஒப்பந்தம் போடும் போது எல்லாம் இவரை மனதில் நினைத்து வாழ வைத்த அந்த ஆட்டோ ஓட்டுநர் சிறந்த மனிதன் ஆவார்

வேதமித்ரா ஜோதிட மையம்

ராக்போர்ட் ராஜ் P.S

7558156423

வாழ்க நலமுடன்🙏 உயர்க வளமுடன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *